தனது சகோதரியின் அழுகிய சடலத்தைத் தோளில் சுமந்து கொண்டு ஒரு நபர் சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகி ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கிய நிலையில், அந்த நபருக்கு உதவி செய்வதாகக் கூறி வங்கி அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
After the video of a man carrying the decomposed body of his sister went viral, Bank officials organised a PHOTOSHOOT and handed over the money. pic.twitter.com/jdDS6nKGz1
— Dr Ranjan (@DocRGM_) April 29, 2026
அதாவது ஒடிசா மாநிலம் ஏன்ஜர் மாவட்டத்தில், இறந்த தனது சகோதரியின் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்க, அவரது எலும்புக்கூட்டையே வங்கிக்குத் தூக்கி வந்த பழங்குடியின நபரின் செயல், வங்கி விதிமுறைகளின் பெயரால் நடக்கும் மனிதநேயமற்ற அதிகார வர்க்கத்தின் முகத்திரையைத் கிழித்துள்ளது.
டியனாலி கிராமத்தைச் சேர்ந்த ஜீது முண்டா என்பவரது மூத்த சகோதரி கல்ரா முண்டா கடந்த ஜனவரி 26-ஆம் தேதி உயிரிழந்தார். அவரது வங்கி கணக்கில் இருந்த 20,000 ரூபாயை எடுக்க ஜீது முண்டா பலமுறை வங்கிக்குச் சென்றுள்ளார். ஆனால், ஒவ்வொரு முறையும் அதிகாரிகள் “கணக்கு வைத்திருப்பவரை (சகோதரியை) நேரில் அழைத்து வாருங்கள்” என்று கூறி ஜீதுவை திருப்பி அனுப்பியுள்ளனர்.
கல்வி அறிவற்ற ஜீதுவுக்கு வாரிசு சான்றிதழ், நாமினி போன்ற சட்ட விதிமுறைகள் தெரியவில்லை. அதிகாரிகள் நேரில் கேட்டதால், வேறு வழியின்றி தனது சகோதரியின் கல்லறையைத் தோண்டி, அவரது எலும்புக்கூட்டை எடுத்து ஒரு மூட்டையில் கட்டி, 3 கிலோமீட்டர் தூரம் சுமந்து கொண்டு கிராம வங்கி கிளைக்கு வந்துள்ளார்.
வங்கியின் வராண்டாவில் அந்த எலும்புக்கூட்டை வைத்ததைக் கண்டு அங்கிருந்த ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் அலறியடித்து ஓடினர். தகவலறிந்து வந்த போலீஸார் நடத்திய விசாரணையில், கல்ரா முண்டாவின் கணவர் மற்றும் மகன் ஏற்கனவே இறந்துவிட்டதும், வறுமையில் வாடும் ஜீதுவுக்கு அந்த 20 ஆயிரம் ரூபாய் வாழ்வாதாரத்திற்கு மிகவும் அவசியம் என்பதும் தெரியவந்தது.
சட்ட நடைமுறைகளை அந்த ஏழைக்குச் சரியாகப் புரிய வைக்க வங்கி அதிகாரிகள் தவறிவிட்டனர் என்று காவல் ஆய்வாளர் கிரண் பிரசாத் சாஹு தெரிவித்துள்ளார். போலீஸாரின் தலையீட்டிற்குப் பிறகு, அந்த எலும்புக்கூடு மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது. அந்தத் தொகையை ஜீதுவுக்கு வழங்க அதிகாரிகள் தற்போது நடவடிக்கை எடுத்த நிலையில் அந்த நபருக்குப் பணத்தை ஒப்படைக்கும் போது, வங்கி அதிகாரிகள் அதை ஒரு ‘போட்டோஷூட்’ போல நடத்தியுள்ளனர். அழுகிய நிலையில் இருந்த சடலத்தின் அருகிலேயே, அந்த நபருக்குப் பணத்தை வழங்குவது போலப் போஸ் கொடுத்துப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
உயிரிழந்த உடலுக்குக் கொடுக்க வேண்டிய குறைந்தபட்ச மரியாதையைக் கூட வழங்காமல், ஒரு சோகமான நிகழ்வைத் தங்களது விளம்பரத்திற்காகப் பயன்படுத்திக் கொண்ட அதிகாரிகளுக்குச் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. “உதவி செய்வது கடமை, அதை இப்படி அநாகரிகமாகப் புகைப்படம் எடுத்து விளம்பரப்படுத்துவது வன்மம்” எனப் பலரும் கொந்தளித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
