மேற்கு வங்கத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் போது, காவலர் சீருடை அணிந்த நபர் ஒருவர் வாக்காளர்களிடம் “அக்காவுக்கு (மம்தா பானர்ஜி) வாக்களியுங்கள்” என்று வெளிப்படையாகக் கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த நபரிடம் பெயர் அட்டை (Name tag) இல்லாததால், அவர் உண்மையான அதிகாரியா அல்லது திரிணாமுல் காங்கிரஸின் ஆள்மாறாட்டமா என பாஜக தலைவர்கள் தேர்தல் ஆணையத்திடம் அடுக்கடுக்கான புகார்களைத் தட்டியுள்ளனர். இதற்கிடையில், ஆராம்பாக் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மிட்டாலி பாக், தான் பாஜகவினரால் தாக்கப்பட்டதாகக் கூறி, “மம்தா தீதி மற்றும் அபிஷேக் பானர்ஜியின் ஆசீர்வாதத்தால் உயிர் பிழைத்தேன்” என நேரலையில் கண்ணீர் மல்கக் கூறியது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

“>

மறுபுறம், சப்ராவில் பாஜக முகவர் தாக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்த நிலையிலும், வன்முறைக்கு அஞ்சாமல் மக்கள் வாக்குச்சாவடிகளில் குவியத் தொடங்கினர். காலை 11 மணிக்கே 40 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், மாலை 5 மணிக்குள் வாக்குப்பதிவு சதவீதம் யாரும் எதிர்பார்க்காத வகையில் 89.99% என்ற இமாலய அளவை எட்டி சாதனை படைத்தது.

குறிப்பாக, அந்த வைரல் வீடியோ குறித்து இணையவாசிகள் கடும் கொந்தளிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.  பாஜக – திரிணாமுல் இடையேயான இந்த மோதல் மேற்கு வங்க அரசியலில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.