
தீனதயாள் வீட்டுவசதி திட்டத்தில் ரூ.1,500 கோடி பணமோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஹரியானா மாநில முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தர்ம் சிங் சோக்கரை அமலாக்கத்துறை (ED) கைது செய்துள்ளது. சம்பந்தப்பட்ட மோசடியில் அவரது தனியார் நிறுவனம் “சாய் ஆயினா ஃபார்ம்ஸ் பிவிடி லிமிடெட்”வும் தொடர்புடையதாக கூறப்படுகிறது. இந்த வழக்கின் பின்னணியில் குருகிராம் போலீசில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாக அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது.
கைது செய்ய வந்த ED அதிகாரிகளை பார்த்ததும் தர்ம் சிங் சோக்கர் தப்பி ஓட முயன்ற வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அவர் தப்பித்து ஓடும் போது அதிகாரிகள் அவரைப் பிடிக்க ஓடி சென்று, தரையில் விழுந்த நிலையில் கைது செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அப்போது அவரும் அதிகாரிகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அவர் எழுந்திருக்கத் தயங்கியதால் அவரை காலரை பிடித்து எழுந்து நிற்கவைத்ததாகவும் தெரிகிறது. இந்த மோதலின் போது அவரது சட்டை கிழிந்தது.
VIDEO | CCTV footage of Enforcement Directorate apprehending former Haryana Congress MLA Dharam Singh Chhoker.
(Source: Third Party)#DharamSinghChhoker pic.twitter.com/ntg2OTkZi5
— Press Trust of India (@PTI_News) May 6, 2025
தர்ம் சிங் சோக்கரின் மகன் விகாஸ் சோக்கர் இன்னும் தலைமறைவாக உள்ளார். இருவரும் சேர்ந்தே ரூ.1,500 கோடியை மோசடி செய்ததாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெறுகிறது.