ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே பேருந்துக்காகக் காத்திருந்த இந்து முன்னணி பிரமுகர் தணிகாசலம், போதையில் இருந்த மர்மக் கும்பலால் ஓட ஓட விரட்டிச் சென்று காவல் நிலையம் முன்பே கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சோகச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்துவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், அரசு 700-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை மூடியதாகக் கூறினாலும், இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடையே மது மற்றும் போதைப்பொருள் பழக்கம் குறையவில்லை என்று விமர்சித்துள்ளார்.

காவல்துறையினர் மீதும் சட்டம்-ஒழுங்கின் மீதும் குற்றவாளிகளுக்கு எந்தவிதமான பயமும் இல்லாத நிலையே இது காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சமூக வலைதளங்களில் வரும் போதை தொடர்பான வீடியோக்களைச் சுட்டிக்காட்டியுள்ள நயினார் நாகேந்திரன், அமைச்சர்கள் ரீல்ஸ் எடுப்பதில் காட்டும் கவனத்தை மக்களின் நிஜப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் காட்டுவதில்லை என்று சாடியுள்ளார்.

“>

 

எதிர்க்கட்சிகளை விமர்சித்து காலத்தைக் கடத்தாமல், உடனடியாகத் தீவிர நடவடிக்கை எடுத்து தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைக் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.