சமூக வலைதளங்களில் சில நிமிடப் புகழையும் லைக்ஸ்களையும் பெற வேண்டும் என்ற மோகம் இன்றைக்கு எல்லையைத் தாண்டிப் போய்க் கொண்டிருக்கிறது. ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் பரபரப்பான நடுரோட்டில் இளம் பெண் ஒருவர் செய்த காரியம், போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி ஒட்டுமொத்த பொதுமக்களையும் பெரும் அவதிக்குள்ளாக்கியுள்ளது.
மக்கள் மற்றும் வாகனங்கள் அடர்த்தியாகச் செல்லும் ஒரு முதன்மைச் சாலையில், எவ்வித அச்சமுமின்றி அந்தப் பெண் திடீரென நடனமாடத் தொடங்கியுள்ளார். இதைப் பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்து வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தியதால், அந்தப் பகுதியில் நொடிப்பொழுதில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இணையத்தில் வைரலாவதற்காக மட்டுமே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட இந்தச் செயல், சாலையில் சென்ற பொதுமக்களுக்கும் அவசரத் தேவைகளுக்காகப் பயணித்தோருக்கும் பெரும் இடையூறை ஏற்படுத்தியது. சாலையில் நடனமாடுவதை யாரோ ஒருவர் வீடியோவாகப் பதிவு செய்து கொண்டிருக்க, அதைக்கூட பொருட்படுத்தாமல் அந்தப் பெண் தொடர்ந்து ஆடிப்பாடி அலப்பறை செய்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், உடனடியாகத் தலையிட்டு அந்தப் பெண்ணின் ஆபத்தான கூத்தைத் தடுத்து நிறுத்தினர். நடுரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்தது மற்றும் பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியது குறித்து காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொது இடங்களிலும், குறிப்பாக வாகனங்கள் வேகமாக இயங்கும் போக்குவரத்துச் சாலைகளிலும் இதுபோன்று பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்வது மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் எனச் சமூக ஆர்வலர்களும் காவல் துறையினரும் தொடர்ச்சியாக எச்சரித்து வருகின்றனர்.
இந்நிலையில் லைக்ஸ்களுக்காகத் தனது உயிரையும், மற்றவர்களின் உயிரையும் பணயம் வைக்கும் இத்தகைய போக்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று இணையவாசிகள் பலரும் அந்தப் பெண்ணின் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சட்டம் மற்றும் பொது ஒழுங்கை மீறி ரீல்ஸ் மோகத்தில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
See this Instagram video by @balaram_pradhan__ https://t.co/XtgVAHyHU3
“>
