“வாய் பேச முடியாத ஜீவன்களிடம் இப்படியா?” என்று கேட்கும் அளவிற்கு ஒரு மனிதாபிமானமற்ற சம்பவம் காஷ்மீரில் நடந்துள்ளது. இரண்டு சிறுவர்கள் சேர்ந்து ஒரு நாயை வலுக்கட்டாயமாகப் பிடித்து வைத்து, அதன் காதை ஒரு கல்லின் மேல் வைத்து கோடாரியால் கொடூரமாக வெட்டியுள்ளனர்.

நாய் வலியால் துடித்த போதிலும், அதனை ஒரு வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் பதிவிட்டுள்ளனர். லைக்ஸ் மற்றும் வியூஸ்களுக்காக அரங்கேற்றப்பட்ட இந்தச் செயல், பார்ப்பவர் நெஞ்சைப் பதற வைக்கிறது.

இந்த வீடியோவைக்கண்டு அதிர்ச்சியடைந்த ‘காஷ்மீர் அனிமல் எய்ட்’ (Kashmir Animal Aid) என்ற தன்னார்வ அமைப்பு, அந்தச் சிறுவர்களைக் கண்டுபிடித்துத் தொடர்பு கொண்டது.

அப்போது அந்தச் சிறுவர்கள் ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்தித் தப்பிக்க முயன்றனர். “உங்களுக்கு இதே நிலை ஏற்பட்டால் வலிக்குமே, அந்த நாய்க்கும் அப்படித்தான் இருக்கும்” என்று அந்த அமைப்பினர் சிறுவர்களைக் கண்டித்ததோடு, அவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

“இவர்கள் மனிதர்களே இல்லை, சைக்கோக்கள்” என நெட்டிசன்கள் இந்தச் சிறுவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கக் கோரி சமூக வலைதளங்களில் கொந்தளித்து வருகின்றனர்.