பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையே நிலவி வரும் அதிகார மோதல் தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, ராமதாஸ் தரப்பில் தீவிரமாகச் செயல்பட்டு வரும் பென்னாகரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே.மணிக்கு, கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி அன்புமணி தரப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி டெல்லி காவல்துறை துணை ஆணையரிடம் அன்புமணி மீது பொய்யான புகார்களை அளித்ததும், டிசம்பர் 15-ஆம் தேதி சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் கட்சித் தலைமைக்கு எதிராக அவதூறு பரப்பியதும் அவர் மீதான முக்கியக் குற்றச்சாட்டுகளாக முன்வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாகச் சென்னையில் (17.12.2025) கூடி விவாதித்த பாமக ஒழுங்கு நடவடிக்கைக் குழு, கட்சி விதி 30-இன்படி ஜி.கே.மணி மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என விளக்கம் கேட்டு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அவரை ஏன் நீக்கக்கூடாது என்பது குறித்து ஒரு வார காலத்திற்குள் உரிய விளக்கத்தை அளிக்குமாறு அந்த நோட்டீஸில் உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக, ராமதாஸும் அன்புமணியும் இணைந்தால் தான் கட்சியை விட்டு விலகத் தயாராக இருப்பதாக ஜி.கே.மணி உருக்கமாகப் பேசியிருந்த நிலையில், இந்தத் திடீர் நோட்டீஸ் பாமக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தந்தை – மகன் இடையேயான இந்த பிளவு பாட்டாளி மக்கள் கட்சியின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.
