உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷஹர் மாவட்டத்தில், இந்திய ராணுவத்தில் பணியாற்றும் தேவதர்ஷன் என்ற ராணுவ வீரருக்கும், அம்மாநில போலீசில் காவலராகப் பணிபுரியும் சன்னி என்பவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள சட்டப் போராட்டம் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது மனைவி ஜான்வியை, காவலர் சன்னி ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்றுவிட்டதாக ராணுவ வீரர் தேவதர்ஷன் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் பரபரப்பு புகார் அளித்தார். ராணுவ வீரரின் மனைவியைக் காவலரே கடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு, போலீஸ் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், தற்போது இந்த வழக்கில் ராணுவ வீரரின் மனைவி ஜான்வி வெளியிட்டுள்ள ஒரு  வீடியோ வாக்குமூலம் ஒட்டுமொத்த கதையையும் தலைகீழாக மாற்றியுள்ளது.

தனது கணவரின் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ள ஜான்வி, அந்த வீடியோவில் தனது கணவர் தேவதர்ஷன் மீது அடுக்கடுக்கான புகார்களைச் சுமத்தியுள்ளார். “ராணுவ வீரர் தேவதர்ஷனுடன் எனக்குக் கட்டாயத்தின் பேரில் தான் நீதிமன்றத் திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமணம் நடந்த நாள் முதலே அவர் என்னை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் கடுமையாகத் துன்புறுத்தி வந்தார்; என் மீது ஏகப்பட்ட கட்டுப்பாடுகளையும் விதித்தார். இதனால் பொறுக்க முடியாமல், நானே எனது சொந்த விருப்பத்தின் பேரில்தான் அந்த வீட்டை விட்டு வெளியேறினேன். இனி எந்தச் சூழ்நிலையிலும், எந்தக் விலை கொடுத்தாவது நான் மீண்டும் அவரிடம் திரும்பிச் செல்ல மாட்டேன்” என்று ஜான்வி அந்த வீடியோவில் அதிரடியாகப் பேசியுள்ளார். மனைவியின் இந்த வீடியோவால், இந்த வழக்கில் இப்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.