புல்வாமா தாக்குதலில் பலியான இராணுவ வீரர்களின் மனைவிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி ராஜஸ்தானில் பாஜக இன்று தீவிர போராட்டத்தில் ஈடுபட்டது. அப்போது போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் கைகளில் கம்புகளை ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சில பேர் காவல்துறையினரை நோக்கி கற்களை வீசியதில் வன்முறை வெடித்தது. அத்துடன் காவல்துறையினரின் தடுப்பான்களும் அடித்து நொறுக்கப்பட்டது. இதன் காரணமாக அவர்களை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இதேபோல் ஜெய்ப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநில எதிர்க் கட்சி துணை தலைவர் ராஜேந்திர ரத்தோர் மற்றும் பாஜக தொண்டர்கள் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.