கர்நாடகாவில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் பாஜக, எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் பொதுகூட்டம், பேரணி என தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதை முன்னிட்டு பெங்களூரு நகரில் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் ராஜீவ் குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, கர்நாடக சட்டசபைக்கான பதவிக்காலம் நடப்பு ஆண்டின் மே 24-ம் தேதி வரை இருக்கிறது. இதனால் அந்த தேதிக்குள் தேர்தல் நடத்தி புது சட்டசபை அமைய வேண்டியது அவசியம் ஆகும்.

கர்நாடகாவில் முதல் முறையாக 80 வயதுக்கு அதிகமான முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் அவர்கள் விரும்பினால், தங்களது வீடுகளில் இருந்தபடி வாக்களிக்கலாம். இதற்குரிய அறிவிப்பு வெளியாகிய 5 நாட்களில் 12டி என்ற படிவம் கிடைக்கும். அதை வாங்கி, பூர்த்தி செய்து 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் அனைவரும் வீட்டிலிருந்து வாக்களிக்க இயலும் என அவர் தெரிவித்துள்ளார்.