ஈரான் தலைநகர் தெஹ்ரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில், 6 குழந்தைகள் உட்பட 25 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில் ஈரான் ராணுவத்தின் முக்கிய அதிகாரியான மேஜர் ஜெனரல் மஜித் காதேமி கொல்லப்பட்டதோடு, அந்நாட்டின் புகழ்பெற்ற ஷெரீப் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் கடுமையாகச் சேதமடைந்தது.
குறிப்பாக, பல்கலைக்கழகத்தின் செயற்கை நுண்ணறிவு மையக் கட்டடம் மற்றும் முக்கியமான தரவுத்தளங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன. வகுப்புகள் ஆன்லைனில் நடந்ததால் மாணவர்கள் தப்பினாலும், ஈரானின் தொழில்நுட்ப வளர்ச்சியைச் சீர்குலைப்பதே இந்தத் தாக்குதலின் முக்கிய நோக்கம் என்று பல்கலைக்கழகத் தலைவர் மசூத் தஜ்ரிஷி குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பாரசீக மொழியில் செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை உருவாக்கும் பணியில் பல்கலைக்கழகம் ஈடுபட்டு வந்த நிலையில், அந்த உள்நாட்டு வளர்ச்சியைத் தடுக்கவே இந்த இலக்கு வைக்கப்பட்டதாகக் கல்வியாளர்கள் கருதுகின்றனர். ஷெரீப் பல்கலைக்கழகம் மட்டுமின்றி, ஈரானின் பழமையான மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் விண்வெளி ஆய்வு மையங்களும் கடந்த வாரங்களில் குறிவைக்கப்பட்டுள்ளன.
சர்வதேசத் தடைகளைத் தாண்டி ஈரான் தொழில்நுட்ப ரீதியாக முன்னேறுவதை அமெரிக்கா விரும்பவில்லை என்பதையே இந்தத் தாக்குதல்கள் காட்டுகின்றன. நவீன உலகில் செயற்கை நுண்ணறிவு அதிகாரம் யாரிடம் இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க கல்வி நிலையங்கள் மீது குண்டு வீசப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
