சிக்கிம் மாநிலத்தை சேர்ந்தவர் சஷாங்க் திவாரி(23). இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிக்கிம் சாரணர் படையில் லெப்டினென்ட் ஆக நியமிக்கப்பட்டார். நேற்று காலை ராணுவ வீரர்கள் ஒரு மரப்பாலத்தை கடக்கும் போது ஸ்டீபன் சுப்பா என்ற வீரர் கால் தவறி பாலத்திலிருந்து ஆற்றில் விழுந்தார்.

அப்போது ஓடையில் அடித்து செல்லப்பட்ட ஸ்டீபனை காப்பாற்ற லெப்டினன்ட் சஷாங்க் திவாரியும், சிப்பாய் நாயக் காட்டிலும் நீரில் குதித்தனர். அவர்கள் நீரில் மூழ்கிய ஸ்டீபனை பத்திரமாக மீட்டனர்‌. அப்போது அதிகமான நீரோட்டத்தின் காரணமாக லெப்டனென்ட் சஷாங்க் திவாரி நீரில் அடித்து செல்லப்பட்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சகவீரர்கள் உயர் அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் சஷாங்க் திவாரியின் உடலை சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு 800 மீட்டருக்கு கீழே கண்டெடுத்தனர்.

தன் உயிரை பெரிதுபடுத்தாமல் சகவீரரின் உயிரை காப்பாற்றுவதற்காக நீரில் குதித்து உயிர்நீத்த சஷாங்க் திவாரியின் வீரமும் அவரது சேவையும் அடுத்த தலைமுறையினருக்கு ஊக்கம் அளிக்கும். இந்த துயரமான நேரத்தில் இந்திய ராணுவம் திவாரியின் குடும்பத்தினருடன் தோளோடு தோள் நிற்கிறது என ராணுவ அதிகாரிகள் தங்களது பதிவை வெளியிட்டுள்ளனர்.