இந்தியப் பிரிவினைக்குப் பிறகு, பாகிஸ்தானில் சிறுபான்மையினராக மாறிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் சமணர்கள் வாழ்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் பகுதிகளின் பெயர்கள் இஸ்லாமியப் பெயர்களாக மாற்றப்பட்டன.

இந்நிலையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள லாகூர் நகரில், தற்போது முஸ்லிம் பெயர்களைக் கொண்ட தெருக்களுக்கு மீண்டும் பழைய இந்துப் பெயர்களைச் சூட்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

உதாரணமாக, லாகூரில் ‘ரஹ்மான் கலி’ என்று அழைக்கப்பட்ட ஒரு தெருவின் பெயர், தற்போது அதன் பழைய பெயரான ‘ராம் கலி’ என மாற்றப்பட்டுள்ளது. பிரிவினையின் போது இழந்ததங்களின் பன்முகக் கலாசார அடையாளத்தை இதன் மூலம் லாகூர் நகரம் மீண்டும் பெற்று வருகிறது. இந்த அதிரடிப் பெயர் மாற்றும் முயற்சியானது.

பாகிஸ்தானின் பஞ்சாப் அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக முன்னெடுத்து நடத்தி வரும் மிகப் பெரிய ‘லாகூர் பாரம்பரியப் பகுதி மீட்டெடுப்பு’ திட்டத்தின் ஒரு முக்கியப் பகுதியாகும். பாகிஸ்தானின் கலாசாரத் தலைநகராகக் கருதப்படும் லாகூர் மாநகரை, 1947 இந்தியப் பிரிவினைக்கு முன்பு அது எப்படி இருந்ததோ, அதே பாரம்பரிய நிலைக்கு மீட்டெடுப்பதை இத்திட்டம் முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதன் மூலம், அங்கு முன்பு இஸ்லாமியப் பெயர்களாக மாற்றப்பட்ட இந்து, சீக்கிய மற்றும் சமண மத அடையாளங்களைக் கொண்ட தெருக்கள் மற்றும்பாரம்பரிய இடங்களுக்குப் பழைய வரலாற்றுப் பெயர்கள் படிப்படியாக மீண்டும் வைக்கப்பட்டு வருகின்றன.