உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்யாவிடமிருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நியாயப்படுத்தி, பின்லாந்து நாடு தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது. பின்லாந்தில் நடைபெற்ற ‘குல்தரந்தா’ சர்வதேச மாநாட்டில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் பின்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் எலினா வால்டோனென் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய பின்லாந்து அமைச்சர் எலினா வால்டோனென், “மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது விதித்த விலை வரம்பு (Price Cap) விதிகளுக்கு உட்பட்டே இந்தியா கச்சா எண்ணெய்யை வாங்கியுள்ளது. ரஷ்யாவிடமிருந்து உலக நாடுகள் எண்ணெய் வாங்குவதை நாங்கள் முற்றிலும் தடை செய்யவில்லை; உலகளாவிய எரிசக்தி சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்வதைத் தடுக்கவும், அதே நேரத்தில் ரஷ்யாவுக்கு அதிக லாபம் கிடைப்பதைத் தடுக்கவுமே இந்த விலை வரம்பு கொண்டு வரப்பட்டது. எனவே, இந்தியா இந்த விதிகளின்படியே செயல்பட்டுள்ளது” என்று சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு ஆதரவாகப் பேசினார்.முன்னதாக, ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தனது பாணியில் மிகவும் அதிரடியாகவும் அழுத்தமாகவும் பதிலடி கொடுத்தார்.
“இந்தியாவின் எரிசக்தி தேவைகள் அரசியல் சார்புடையவை அல்ல, அவை நாட்டின் தேவை மற்றும் சந்தை விலையின் அடிப்படையிலானது. உக்ரைன் போருக்குப் பின் ஐரோப்பிய நாடுகள் தங்களின் வழக்கமான தேவைகளுக்குப் பதிலாக, இந்தியாவின் பாரம்பரிய விநியோகஸ்தர்களான மத்திய கிழக்கு நாடுகளிடமிருந்து அதிக அளவில் எண்ணெய்யை வாங்கத் தொடங்கின. இதனால் ஏற்பட்ட உலகளாவிய எரிசக்தி சந்தை மாற்றமே எங்களை ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கத் தூண்டியது. மேலும், உலகச் சந்தையை நிலைப்படுத்த இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க வேண்டும் என்று தொடக்கத்தில் அமெரிக்காவே எங்களைக் கேட்டுக்கொண்டது” என்று சர்வதேச நாடுகளின் இரட்டை நிலையை ஜெய்சங்கர் பகிரங்கமாகத் தோலுரித்துக் காட்டினார். பின்லாந்து அமைச்சரின் இந்த ஆதரவு, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்குக் கிடைத்த பெரும் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
