ஆந்திர மாநிலத்தில் சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஓட்டுநரை மீட்க முன்வராமல், லாரியில் இருந்த குளிர்பான பாட்டில்களை பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை குளிர்பானங்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் லாரியின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. லாரியை ஓட்டி வந்த ஓட்டுநரும், கிளீனரும் இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர்.
விபத்து நடந்த சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் மற்றும் அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அங்கிருந்தவர்களின் செயல் முகம் சுளிக்க வைப்பதாக இருந்தது.
லாரி கவிழ்ந்ததில் சாலையில் சிதறிக் கிடந்த குளிர்பான பாட்டில்களைக் கண்ட மக்கள், காயமடைந்தவர்களைக் காப்பாற்றுவதை விடுத்து, பாட்டில்களை அள்ளுவதில் ஆர்வம் காட்டினர்.
பலர் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு, கைகளில் கிடைத்த பெட்டிகளை எடுத்துச் சென்றனர். சிலரோ பைகளில் குளிர்பானங்களை நிரப்பிச் சென்றனர்.
In Andhra Pradesh, a truck met with an accident, but instead of helping the driver and cleaner, people looted the soft drinks. Peak Civic Sense pic.twitter.com/ec8Rzqma3F
— 🚨Indian Gems (@IndianGems_) March 20, 2026
ஓட்டுநர் வலியால் அலறிய நிலையிலும், அதனைப் பொருட்படுத்தாமல் மக்கள் குளிர்பானங்களைச் சேகரிப்பதிலேயே குறியாக இருந்தனர். இந்தக் காட்சிகள் அங்கிருந்த சிலரால் வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. “மனிதாபிமானம் எங்கே போனது?”, “உயிரை விட ஒரு பாட்டில் குளிர்பானம் பெரிதா?” எனப் பலரும் சமூக அக்கறையற்ற மக்களின் இந்தச் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கூட்டத்தைக் கலைத்து காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், விபத்தை சாதகமாக்கிக் கொண்டு பொருட்களைத் திருடிச் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும் நாகரிகமடைந்த சமூகத்தில் ‘பொது அறிவு’ (Civic Sense) மற்றும் சக மனிதன் மீதான அக்கறை குறைந்து வருவதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உறுதிபடுத்தியுள்ளது.
