தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் ‘தமிழக வெற்றி கழகம்’ (தவெக) தலைவர் விஜய் மிகப்பெரிய வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் வேளையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் நிலைப்பாடு குறித்த விவாதங்கள் மீண்டும் மேலெழுந்துள்ளன. 1996-ம் ஆண்டு “ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கடவுளால்கூட தமிழ்நாட்டைக் காப்பாற்ற முடியாது” என்று ரஜினி கொடுத்த ஒற்றைக் குரல், ஒரு பெரிய அரசியல் மாற்றத்தையே ஏற்படுத்தியது. ஆனால், அப்போது கிடைத்த இமாலய வாய்ப்பைப் பயன்படுத்திக் கட்சித் தொடங்காமல் ரஜினி பின்வாங்கியது, அவரது அரசியல் பயணத்தின் முதல் சறுக்கலாகப் பார்க்கப்படுகிறது.

​அதேபோல, 2020-ல் “இப்போ இல்லன்னா எப்பவும் இல்ல” என அறிவித்துவிட்டுக் கடைசி நேரத்தில் ரஜினி பின்வாங்கியது அவரது ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்தது. ஒருவேளை ரஜினிகாந்த் அப்போது அரசியலுக்கு வந்திருந்தால், தற்போது விஜய் பெற்று வரும் அதே எழுச்சியைப் பெற்றிருப்பார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ரஜினிகாந்த் செய்யத் தவறிய அந்த “அதிரடி முடிவை” விஜய் மிகச் சரியாகச் செய்தார். உச்சகட்டப் புகழில் இருக்கும்போதே சினிமாவிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, முழுநேர அரசியலில் குதித்த விஜய்யின் துணிச்சலே, ரஜினி தவறவிட்ட அந்த வெற்றிப் பாதையை அவருக்கு அமைத்துக் கொடுத்துள்ளது. ரஜினியின் தயக்கமும், விஜய்யின் தெளிவான திட்டமுமே இன்று தேர்தல் முடிவுகளில் எதிரொலிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.