தமிழக வெற்றி கழகத்தை (தவெக) பல்வேறு கட்சிகளுடன் இணைத்து வெளியாகும் கூட்டணி செய்திகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்று அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார்.

சமீபகாலமாக நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்குத் தணிக்கைத் துறையினால் (சென்சார்) ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் கரூர் கூட்டநெரிசல் தொடர்பான சிபிஐ விசாரணை போன்றவை அவருக்குக் கொடுக்கப்படும் அரசியல் நெருக்கடிகளாகப் பார்க்கப்படுகின்றன. குறிப்பாக, மத்திய பாஜக அரசு இத்தகைய நெருக்கடிகளைத் தருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில், ‘ஜனநாயகன்’ திரைப்பட விவகாரத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தனர். இதன் காரணமாக, தவெக – காங்கிரஸ் இடையே புதிய கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாகப் பரவலாகப் பேசப்பட்டது. எனினும், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தற்போது வரை திமுக கூட்டணியிலேயே நீடித்து வருகிறது.

காங்கிரஸ் மட்டுமின்றி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) ஆகியோருடனும் தவெக தலைமை ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் கசிந்தன. இந்தத் தகவல்கள் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறின.

இந்தக் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தவெக துணைப் பொதுச்செயலாளர் ராஜ்மோகன் தனது ‘எக்ஸ்’ (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “தமிழக வெற்றிக் கழகத்தைப் பல்வேறு அரசியல் கட்சிகளுடன் தொடர்புபடுத்தி, கூட்டணி குறித்த செய்திகள் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பரப்பப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை மற்றும் அடிப்படை ஆதாரமற்றவை.

கழகத்தின் நிலைப்பாடு மற்றும் முடிவுகள் குறித்துத் தலைமைக் கழகத்திலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் வரை, இத்தகைய வதந்திகளைப் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.”

இதன் மூலம், கூட்டணி குறித்த யூகங்களுக்குத் தற்காலிகமாகத் திரை விழுந்துள்ளது. எனினும், 2026 தேர்தல் களம் நெருங்க நெருங்க இத்தகைய அரசியல் நகர்வுகள் மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.