“தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது முற்றிலும் உண்மைக்கு மாறானது என்று சாடியுள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட பாலியல் குற்றச்சம்பவங்களை வீடியோவாக வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தியாவிலேயே தமிழகம்தான் பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் என்று பெருமிதம் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அண்ணாமலை தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு தொகுப்பு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில், கடந்த காலங்களில் தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற பல்வேறு பாலியல் வன்கொடுமை சம்பவங்களையும், அதில் திமுக நிர்வாகிகளின் தொடர்பையும் பட்டியலிட்டுள்ளார். அண்ணாமலை வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கியச் சம்பவங்கள்:

  • அண்ணா பல்கலைக்கழக விவகாரம்: உயர்கல்வி நிறுவனமான அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக திமுகவைச் சேர்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டது.

  • நிர்வாகிகள் மீதான வழக்குகள்: விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக நிர்வாகி திருவக்கரை பாஸ்கரன், விருத்தாசலத்தில் 5 வயது குழந்தையைச் சித்ரவதை செய்த திமுக கவுன்சிலர், மற்றும் கோவையில் பெண்ணை மிரட்டிய திமுக நிர்வாகி மீதான புகார்கள்.

  • சிறுமிக்கு இழைக்கப்பட்ட அநீதி: 14 வயது சிறுமியை உறவினர் வீட்டில் விடுவதாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்து, கொலை மிரட்டல் விடுத்த திமுக நிர்வாகி முருகேசனின் செயல்.

  • காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லை: திமுக பொதுக்கூட்டத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் காவலரிடமே அத்துமீறலில் ஈடுபட்ட இரண்டு திமுக நிர்வாகிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள்.

மேலும், திருப்பரங்குன்றம், தூத்துக்குடி, கரூர், விருதுநகர் மற்றும் தஞ்சை ஒரத்தநாட்டில் கஞ்சா போதையில் திமுகவினர் நடத்திய கூட்டுப் பாலியல் பலாத்காரச் சம்பவங்கள் என நீண்ட பட்டியலை அண்ணாமலை அடுக்கிக் காட்டியுள்ளார். இது குறித்து அண்ணாமலை கூறியிருப்பதாவது: “இத்தனை பாலியல் குற்றங்களில் ஆளுங்கட்சி நிர்வாகிகள் நேரடியாகத் தொடர்பு பெற்றுப் பிடிபட்ட பின்னரும், தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுவது பச்சை பொய்யன்றி வேறில்லை.” மேலும் ஆளுங்கட்சி நிர்வாகிகள் மீதான இந்தப் புகார் பட்டியல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.