சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் அறிமுகமான சாகிப் ஹுசைன், தனது அதிவேகப் பந்துவீச்சால் அனைவரையும் மிரள வைத்தார். 24 ரன்கள் மட்டுமே கொடுத்து ஜெயஸ்வால், ஜோஃப்ரா ஆர்ச்சர் போன்ற அதிரடி வீரர்களின் விக்கெட்டுகள் உட்பட மொத்தம் 4 விக்கெட்டுகளைச் சாய்த்து அசத்தினார். இவருடன் இணைந்து மற்றொரு அறிமுக வீரர் பிரபுல் ஹிங்கே 4 விக்கெட்டுகளை வீழ்த்த, இருவரும் சேர்ந்து ராஜஸ்தான் அணியின் பேட்டிங் வரிசையைத் துவம்சம் செய்தனர்.
யார் இந்த சாகிப் ஹுசைன்?
பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் சாகிப். இவரது தந்தை ஒரு கூலித் தொழிலாளி. வசதிகள் இல்லாத கிராமத்தில் டென்னிஸ் பந்து கிரிக்கெட்டில் தனது வேகத்தைக் காட்டத் தொடங்கிய சாகிப், பிறகு முறையான பயிற்சி தேடி பாட்னாவிற்குப் பயணமானார். பீகார் கிரிக்கெட் லீக் மற்றும் சையத் முஷ்டாக் அலி தொடர்களில் 140 கி.மீ வேகத்திற்கு மேல் பந்துவீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
2024-ல் கேகேஆர் அணியால் எடுக்கப்பட்டாலும், அங்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், 2026 ஏலத்தில் சாகிப்பின் வேகத்தை நம்பி அவரை வாங்கிய எஸ்ஆர்எச் (SRH) அணிக்கு, முதல் போட்டியிலேயே தனது அனல் பறக்கும் பந்துவீச்சால் தகுந்த பதிலைக் கொடுத்துள்ளார் இந்த பீகார் எக்ஸ்பிரஸ்!
