தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான மே 4-ம் தேதி முதல் இன்று வரை, ஒரு முழுநீள அரசியல் திரைப்படத்தைப் போன்ற பரபரப்பான திருப்பங்கள் நிகழ்ந்துள்ளன. 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த விஜய் தலைமையிலான தவெக, பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்கள் இல்லாததால் ஆட்சியமைக்க கடும் போராட்டத்தை எதிர்நோக்கியது.
ஆரம்பத்தில் இருந்தே தவெக-வோடு கைகோர்க்கத் தயாராக இருந்த காங்கிரஸ் ஆதரவு அளித்தபோதும், ஆளுநர் மாளிகையில் ‘எண் பலத்தை’ நிரூபிக்க விஜய் நான்கு முறை அலைய வேண்டியிருந்தது.
விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவுக் கடிதங்களோடு இறுதியில் 120 என்ற மேஜிக் எண்ணை எட்டிய விஜய், ஆளுநரின் இழுபறிகளுக்குப் பிறகு ஒரு வழியாக ஆட்சியமைக்க அழைப்பு பெற்றுள்ளார்.
விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை விமர்சனங்கள் மற்றும் ‘தி ரூட்’ நிறுவனம் பின்னால் இருந்து நடத்திய தேர்தல் வியூகங்கள் எனப் பல்வேறு விவாதங்களுக்கு மத்தியில் இந்த வெற்றி கிடைத்துள்ளது. தனது கொள்கை எதிரி என்று சொன்ன பாஜக-விடம் சரணடையாமல், தனது அரசியல் எதிரி என்று விமர்சித்த திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவைப் பெற்றே விஜய் இன்று அரியணையில் ஏறுகிறார்.
ஆளுநர் மாளிகை வழங்கிய கெடுபிடிகள், மௌனமான அரசியல் நகர்வுகள் மற்றும் திடீர் ஆதரவுக் கடிதங்கள் எனப் பல சவால்களைக் கடந்த விஜய், இன்று காலை 10.30 மணிக்கு நேரு உள் விளையாட்டு அரங்கில் தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார்.
திராவிடக் கட்சிகளின் 59 ஆண்டு கால ஆதிக்கத்தை உடைத்து, ஒரு புதிய அரசியல் அத்தியாயம் இதன் மூலம் தொடங்கி உள்ளது.
