கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் சட்டிகுனி அருகே துகனூர் ஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் சரணப்பா. கூலி தொழிலாளியான இவருக்கு மனைவி, 5 வயது மகள் சான்வி, 3 வயது மகன்கள் ஹேமந்த் மற்றும் பார்கவ் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
கடந்த சில வருடங்களாக மனைவியின் நடத்தை குறித்து சந்தேகத்தில் இருந்த சரணப்பா, அவ்வப்போது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. “இந்த மூன்று குழந்தைகளும் எனது குழந்தைகள் அல்ல” எனக் கூறி மனைவியை அடிக்கடி சித்ரவதை செய்துள்ளாராம்.

இந்த நிலையில், 1½ ஆண்டுகளுக்கு முன்பு மனைவி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். 15 நாட்களுக்கு முன்பு சரணப்பா தனது மனைவியை சமாதானம் செய்து மீண்டும் அழைத்து வந்திருந்தார்.
ஆனால், கடந்த இரவில் மீண்டும் மனைவியுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர், “யாருடைய குழந்தைகள் இவர்கள்?” எனக் கேட்டும், “எனக்கு எந்த உறவும் இல்லை” எனக் கூறியும் மனைவியை திட்டி விட்டுள்ளார். இந்த சண்டைக்குப் பிறகு இரவு அனைவரும் தூங்கிய நிலையில், மர்மமான முடிவெடுத்த சரணப்பா, காலையில் எழுந்து சரணப்பாவின் மனைவி இயற்கை உபாதை கழிக்க வெளியே சென்றார்.
3 குழந்தைகளும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தன. அந்த சமயத்தில் சரணப்பா வீட்டில் இருந்த கோடரியை எடுத்து பிஞ்சு குழந்தைகள் என்றும் பாராமல் அவர்களை சரமாரியாக தூங்கிக் கொண்டிருந்த மூன்று பிள்ளைகளையும் வெட்டியுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் 5 வயது சான்வி மற்றும் 3 வயது பார்கவ் இருவரும் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். ஹேமந்த் படுகாயமடைந்து தவித்த நிலையில், அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு ஹேமந்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படும் நிலையில், அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவத்தின் போது வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்த மனைவி வீடு திரும்பி இந்தக் கொடூரமான காட்சியை கண்டு கதறி அழுதுள்ளார்.
இந்நிலையில், குற்றச் செயல்களுக்குப் பிறகு சரணப்பா தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து யாதகிரி புறநகர் காவல் துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறார்களை கொடூரமாகக் கொன்ற இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மக்கள் தரப்பில் குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது.
