கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில், 21 வயது இளைஞர் ஒருவர் தனது மைனர் சகோதரியைக் கட்டாயப்படுத்தி, கர்ப்பமாக்கிய அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமிக்குக் கடுமையான முதுகு வலியால் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அன்றிரவு அவருக்கு குழந்தை பிறந்தபோதுதான் இந்த உண்மை தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனை அதிகாரிகளிடம் நடந்த கொடூரத்தை விவரித்தபோது, இதுகுறித்துத் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த வாக்குமூலத்தின்படி, அவரது அண்ணன் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து தன்னை உடல் ரீதியான உறவுக்கு வற்புறுத்தியதாகவும், இந்த விவகாரம் சமூகத்தில் களங்கத்தை ஏற்படுத்திவிடுமோ என்று தான் கவலை தெரிவித்தபோதும், அவர் தன்னைக் கவனித்துக் கொள்வதாகக் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரம் குறித்து யாரிடமாவது பேசினால், உயிரை மாய்த்துக்கொள்வதாக அந்த நபர் மிரட்டியதாகவும் சிறுமி குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியிடமிருந்து வாக்குமூலங்களைப் பெற்ற பிறகு, போலீஸார் அந்த இளைஞர் மீது BNS மற்றும் போக்சோ சட்டத்தின் (POCSO Act) பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அந்த நபர் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
