காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதி எம்.பி.யுமான சசி தரூர், சமீபகாலமாகப் பிரதமர் நரேந்திர மோடியையும், பாஜக-வையும் வெளிப்படையாகப் புகழ்ந்து வருவதால், காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவி வருகிறது.
மத்திய அரசின் செயல்பாடுகளைப் பாராட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ள சசி தரூர், காங்கிரஸ் தலைமை நிர்வாகிகளைச் சந்திப்பதைத் தவிர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. அண்மையில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க வெளிநாடுகளுக்குச் சென்ற அனைத்துக் கட்சிக் குழுவிலும் சசி தரூர் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நடப்பு பாராளுமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடு குறித்து ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை சசி தரூர் புறக்கணித்துள்ளார். ஏற்கனவே சோனியா தலைமையில் நடந்த காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம் மற்றும் கடந்த மாதம் எஸ்.ஐ.ஆர். குறித்த விவாதத்தையும் அவர் புறக்கணித்திருந்த நிலையில், இது அவர் 3வது முறையாக ஆலோசனைக் கூட்டத்தைத் தவிர்த்திருப்பது ஆகும். சசி தரூரின் இந்தச் செயல் காங்கிரஸ் கட்சி மத்தியில் மேலும் சலசலப்பையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
