ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தின் போது செங்கோட்டையனை எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்தார். அவர் பிரச்சாரக் கூட்டத்தில் பேசியதாவது, கட்சியின் கட்டுப்பாட்டை மீறி ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியை உடைக்க நினைத்தவர் செங்கோட்டையன். தலைக்கனம் மற்றும் அகங்காரத்தால் தான் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். செங்கோட்டையன் ஒரு திமிர் பிடித்தவர் மற்றும் மோசமான குணம் உடையவர். சாதாரண தொண்டர்களை அவர் ஒருபோதும் மதித்தது கிடையாது. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆட்சி காலங்களில் அதிமுக தொண்டர்கள் ரத்தம் சிந்தி வேர்வை சிந்தி உழைத்ததால் தான் அவர் எம்எல்ஏவானார்.

அவரது சொந்த குடும்பத்தில் இருந்து அதாவது மனைவி மற்றும் மகன் ஆகியோர் செங்கோட்டையன் மீது புகார் கூறியதால் ஜெயலலிதா செங்கோட்டையனின் பதவியை பறித்தார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை ஒருபோதும் செங்கோட்டையன் மதித்ததே கிடையாது. அவர் ஒரு மோசமான மனிதர் என்று ஜெயலலிதா தன்னிடம் கூறியுள்ளதார். செங்கோட்டையன் என்னிடம் வந்து கண்ணீர் வடித்ததால்தான் அவருக்கு என் அமைச்சரவையில் நான் இடம் கொடுத்தேன். மேலும் தான் முதலமைச்சராக இருந்த காலத்திலேயே செங்கோட்டையனுக்கு எதிராக பல ஆதாரங்களை திரட்டி விட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க தேவையான ஆதாரங்கள் தான் வசம் இருப்பதாகவும் கூறினார்.