உலகப் புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், தனது உலகளாவிய பணியாளர்களில் சுமார் 2.1 சதவீதத்தினரை, அதாவது 4,800 ஊழியர்களை ஒரே நேரத்தில் பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது ஐடி துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நிறுவனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கை மற்றும் வணிக இலக்குகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எக்ஸ்பாக்ஸ் கேமிங் பிரிவு மற்றும் வணிகப் பிரிவுகள் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் செயற்கை நுண்ணறிவு, கோபைலட் மற்றும் ஓபன்ஏஐ போன்ற அதிநவீன தொழில்நுட்ப உள்கட்டமைப்புகளில் நிறுவனம் அதிக முதலீடு செய்து வரும் வேளையில், செலவினங்களைக் கட்டுப்படுத்தவும், மாறிவரும் சந்தை சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளவும் இந்த ஆட்குறைப்பு நடத்தப்படுவதாக மைக்ரோசாப்ட் விளக்கமளித்துள்ளது.
இருப்பினும், இந்த கடுமையான பணிநீக்க நடவடிக்கையை விட, பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு நிறுவனம் அறிவித்துள்ள ‘பணிவிலகல் இழப்பீடு’ தான் தற்போது தொழில்நுட்ப உலகில் ஹாட் டாபிக்காகப் பேசப்பட்டு வருகிறது. ஊழியர்களின் பணி நிலைக்கு ஏற்ப இந்த இழப்பீடு பிரிக்கப்பட்டுள்ளது.
இதனால் லெவல் 64 அல்லது அதற்கும் கீழே உள்ள ஊழியர்களுக்கு, அவர்கள் பணியாற்றிய ஒவ்வொரு 6 மாத காலத்திற்கும் தலா 1 வார அடிப்படைச் சம்பளமும், லெவல் 65 முதல் 67 வரை உள்ள மூத்த ஊழியர்களுக்கு ஒவ்வொரு 6 மாத கால சேவைக்கும் தலா 2 வார அடிப்படைச் சம்பளமும் இழப்பீடாக வழங்கப்படவுள்ளது.
இந்நிலையில் பொருளாதார மந்தநிலை மற்றும் கடுமையான பணவீக்கத்திற்கு மத்தியில் வேலை இழக்கும் ஊழியர்களுக்கு இந்த சிறப்பு சலுகைகள் மற்றும் நிதி உதவி ஓரளவிற்கு நிம்மதியைத் தரும் என்பதால், இந்தத் தொகுப்பு பற்றிய விவாதங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.
