இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத் (PCB) தலைவர் மொஹ்சின் நக்வி தனது கடும் கண்டனத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டி சுமூகமாக நடைபெற இலங்கை அதிபர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு மொஹ்சின் நக்வி பாராட்டு தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது: இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டி திட்டமிட்டபடி நடப்பதற்கு இலங்கை அதிபரின் தலையீடே முக்கிய காரணம். அவர் பாகிஸ்தான் பிரதமரைத் தொடர்பு கொண்டு பேசிய பிறகே, நிலவி வந்த சிக்கல்கள் முடிவுக்கு வந்து போட்டி உறுதியானது. இதற்காக இலங்கை அதிபருக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.”

இருப்பினும், இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வியடைந்த விதம் நக்வியை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. பி.டி.ஐ (PTI) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி,  பிரேமதாசா மைதானத்தில் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பாகிஸ்தானின் தோல்வி உறுதியானதை அடுத்து, தலைவர் மொஹ்சின் நக்வி ஆட்டம் முடிவதற்கு முன்பே மைதானத்தை விட்டு வெளியேறினார்.

அணியின் மோசமான ஆட்டத்திறன் குறித்து தனது கோபத்தை அணி மேலாளர் நவேத் அக்ரம் சீமாவிடம் அவர் வெளிப்படுத்தியுள்ளார். முக்கியமான போட்டிகளில் இது போன்ற பொறுப்பற்ற ஆட்டத்தை எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று பிசிபி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவிடம் தொடர்ச்சியாகப் பாகிஸ்தான் தோல்வியடைந்து வருவது அந்நாட்டு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.