அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகைக்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் ஈரானுக்கு எதிரான தனது நிலைப்பாட்டில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பின் போது பாதுகாப்புப் படையினரால் சந்தேக நபர் ஒருவர் சுடப்பட்டதை அடுத்து, டிரம்ப் தற்காலிகமாக மேடையிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.
இருப்பினும், சிறிது நேரத்திலேயே மீண்டும் வந்த அவர், இத்தகைய அச்சுறுத்தல்கள் தன்னை ஒருபோதும் முடக்க முடியாது என்றும், ஈரானுடனான விவகாரங்களில் அமெரிக்காவின் உறுதியான கொள்கைகள் தொடரும் என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.
இதனால் ‘ ஈரானின் அணுஆயுதத் திட்டம் மற்றும் பிராந்திய ஆதிக்கத்திற்கு எதிராக அமெரிக்கா எடுத்து வரும் கடுமையான நடவடிக்கைகள் எக்காரணம் கொண்டும் கைவிடப்படாது என்பதை டிரம்ப் இந்த உரையின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தனது மன உறுதியைக் குலைக்காது என்று குறிப்பிட்ட அவர், நாட்டின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளில் தான் மிகுந்த கவனத்துடன் இருப்பதாகத் தெரிவித்தார். வெள்ளை மாளிகை அருகே நிகழ்ந்த இந்தத் தாக்குதல் முயற்சி சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், டிரம்பின் இந்த துணிச்சலான பேச்சு அவரது ஆதரவாளர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
