தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அண்மைக் காலங்களாக அதிமுகவை விமர்சித்து வருவதற்கு அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கடும் பதிலடி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில், ‘மெர்சல்’ திரைப்பட வெளியீட்டின் போது அதிமுக செய்த உதவியை மறந்துவிட்டு விஜய் பேசுவதாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ சாடியுள்ளார்.
கோவில்பட்டியில் தவெக-வினர் அதிமுகவில் இணையும் விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய கடம்பூர் ராஜூ, விஜய்யின் கடந்த கால செயல்பாடுகளை சுட்டிக்காட்டி பேசியதாவது: “விஜய்யின் மெர்சல் திரைப்படம் ரிலீஸாவதில் பெரும் சிக்கல் நிலவியது. விலங்குகள் நல வாரியத்தின் தடையில்லாச் சான்று கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. அப்போது எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதலமைச்சராகவும், நான் செய்தித் தொடர்புத் துறை அமைச்சராகவும் இருந்தோம்.
படம் வெளியானால் தான் ரூ.140 கோடி வசூல் கிடைக்கும் என்கிற இக்கட்டான சூழலில், நடிகர் விஜய் எங்களை நாடி வந்தார். அரை மணி நேரம் அல்ல, சுமார் 3 மணி நேரம் எங்களுடன் அமர்ந்து அந்தப் பிரச்சனை குறித்துப் பேசினார். அது தீபாவளி சமயம்.
விலங்குகள் நல வாரிய நிர்வாகிகள் வியாழக்கிழமை தான் கூடுவார்கள். ஆனால் படம் செவ்வாய்க்கிழமை வெளியாக வேண்டியிருந்தது. விஜய் எங்களை வந்து சந்தித்ததோ ஞாயிற்றுக்கிழமை. மிகக் குறுகிய கால அவகாசமே இருந்த போதிலும், எடப்பாடியார் அவர்கள் டெல்லி வரை பேசி, திங்கட்கிழமை அதிகாரிகளை கூடச் செய்து சான்றிதழ் கிடைக்க வழிவகை செய்தார்.
திட்டமிட்டபடி செவ்வாய்க்கிழமை படம் ரிலீஸ் ஆனது. இதற்காக ‘வாழ்நாள் முழுவதும் அதிமுகவுக்கு நன்றிக்கடன்பட்டு இருப்பேன்‘ என்று அன்று விஜய் கூறினார். ஆனால், இன்று எங்களை ஊழல் கட்சி என்று விமர்சிப்பதோடு, அதிமுகவின் பெயரைக் குறிப்பிடக்கூட அவர் பயப்படுகிறார்” என்று கடம்பூர் ராஜூ விமர்சித்துள்ளார்.
#WATCH | “வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு நன்றிக் கடனாக இருப்பேன் என சொன்னவர் விஜய்”
மெர்சல் திரைப்பட ரிலீஸ் விவகாரத்தில் நடந்ததை பகிர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு.#SunNews | #KadamburRaju | #Vijay | #Mersal pic.twitter.com/m05W2zy9l7
— Sun News (@sunnewstamil) February 9, 2026
