தமிழக அரசியலில் தேர்தல் கூட்டணிகளுக்கான காய்நகர்த்தல்கள் சூடுபிடித்துள்ள நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸை, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கூட்டணிக்கு கொண்டுவர முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போதைய அரசியல் சூழலில், அதிமுக கூட்டணியில் அன்புமணி ராமதாஸும், திமுக கூட்டணியில் திருமாவளவனும் இருப்பதால், ராமதாஸ் அவர்கள் இன்னும் எந்த முடிவும் எடுக்க முடியாமல் ஒரு இக்கட்டான நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இரண்டு திராவிடக் கட்சிகளுடனும் கூட்டணி அமைப்பதில் நிலவும் இந்தச் சிக்கலைப் பயன்படுத்திக்கொள்ள தவெக தரப்பு திட்டமிட்டுள்ளது.

இந்தச் சூழலைச் சாதகமாக்கி, மருத்துவர் ராமதாஸை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த செங்கோட்டையன் திட்டமிட்டுள்ளார். இந்தக் கூட்டணியை உறுதிப்படுத்த பாமக-விற்கு 10 சட்டமன்றத் தொகுதிகள் வரை ஒதுக்கீடு செய்ய தவெக தலைமை முடிவு செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதிய கூட்டணியில் இணையுமா அல்லது பழைய பாணியிலேயே பாமக முடிவெடுக்குமா என்பது இன்னும் சில நாட்களில் தெரியவரும். இந்த முன்னெடுப்பு தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதே நேரத்தில் தேமுதிகவும் என்னும் கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிடாததால் பிரேமலதா விஜயகாந்த் முடிவு குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.