டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவன ஊழியர் அமித் அபய் பிரம்மோ தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தகவல் தொழில்நுட்ப (IT) துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில், தற்கொலைக்குத் தூண்டியதாகக் கூறப்படும் டிசிஎஸ் நிறுவனத்தின் மூன்று உயர் அதிகாரிகள் மீது போலீசார் தங்களது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அமித் பிரம்மோவை நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் வெவ்வேறு காரணங்களுக்காக மனரீதியாகத் துன்புறுத்தியதாகவும், அவரது பெயரைக் கெடுக்கும் வகையில் மின்னஞ்சல்களை அனுப்பியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து, போசரி போலீசார் டிசிஎஸ் நிறுவனத்திற்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பி, சம்பந்தப்பட்ட அந்த மூன்று அதிகாரிகளையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளனர். இந்த விசாரணையின் முடிவில் ஐடி நிறுவனங்களில் நடக்கும் மன உளைச்சல் குறித்த பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து டிசிஎஸ் நிறுவனம் தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளது. உயிரிழந்த அமித்தின் குடும்பத்தினருக்கு நிறுவனம் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும், குற்றம் சாட்டப்பட்ட ஊழியர்கள் மீதான புகார்கள் குறித்து உள் விசாரணை மற்றும் உண்மைத்தன்மையைக் கண்டறியும் பணிகள் துவங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த வழக்கு தற்போது போலீசாரின் விசாரணையில் இருப்பதால், இந்த கட்டத்தில் இது குறித்து விரிவாகப் பேச முடியாது என்றும், காவல்துறைக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கி வருவதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்த தற்கொலை வழக்கு தொடர்பாக, அமித் பிரம்மோவின் மகன் போசரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், வினோத் ஜேத்லால் பாலிசா, அர்ச்சனா மற்றும் சாஸ்வதி ஆகிய மூன்று அதிகாரிகள் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.