தமிழக அரசியல் சூழல் குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை தற்போது இல்லை என்று குறிப்பிட்டார். ஒருவேளை எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், அதிக இடங்களை வென்ற தனிப்பெரும் கட்சியை ஆட்சி அமைக்க அழைப்பதே முறையானது என்றும் அவர் கூறினார்.
மேலும், ஒரு அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறதா என்பதைச் சட்டப்பேரவையில் தான் நிரூபிக்க வேண்டுமே தவிர, ஆளுநர் மாளிகையில் அல்ல என்பதை அவர் சுட்டிக்காட்டினார். ஆளுநரின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்த கபில் சிபல், தவெக ஆட்சி அமைப்பதைத் தடுப்பதற்காக ஆளுநர் காலதாமதம் செய்வதாகக் குற்றம் சாட்டினார்.
சட்டப்பேரவை எடுக்கும் முடிவுகளில் தலையிடாமல் ஆளுநர் தன் கடமையைச் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும், அவர் தானாக முன்வந்து செய்திக் குறிப்புகளை வெளியிடக் கூடாது என்றும் வலியுறுத்தினார். பல மாநிலங்களில் ஆளுநர்கள் பாஜகவின் ஏஜெண்டுகளைப் போலச் செயல்படுவதாகச் சாடிய அவர், ஜனநாயக முறைப்படி ஆட்சி அமைய ஆளுநர் வழிவிட வேண்டும் எனத் தெரிவித்தார்.
