உலகிலேயே மிக மோசமாக மாசுபட்ட நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக சுவிஸ் காற்று தர கண்காணிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள 2025-ஆம் ஆண்டிற்கான ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ள காற்றின் தர அளவுகோல்களின்படி, ஒரு கன மீட்டரில் பிஎம்2.5  துகள்களின் அளவு 5 மைக்ரோ கிராமுக்கும் குறைவாக இருக்க வேண்டும்.

ஆனால், பாகிஸ்தான் இந்த வரம்பை விட மிக அதிக அளவிலான மாசுபாட்டைக் கொண்டு முதலிடத்தில் உள்ளது. பாகிஸ்தானைத் தொடர்ந்து வங்காளதேசம் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகள் முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்துள்ளன. இந்த அறிக்கையின்படி, கண்காணிக்கப்பட்ட 143 நாடுகளில் 130 நாடுகள் உலக சுகாதார அமைப்பின் காற்று தர வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில், 2025-ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக 75 நாடுகள் தங்கள் நாட்டின் காற்று மாசுபாட்டைக் குறைத்துள்ளன. குறிப்பாக ஆஸ்திரேலியா, ஐஸ்லாந்து, எஸ்தோனியா மற்றும் பனாமா போன்ற நாடுகள் உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைக்கப்பட்ட தர வரம்பிற்குள் உள்ளன. லாவோஸ், கம்போடியா மற்றும் இந்தோனேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளும் மாசுபாட்டைக் குறைப்பதில் முன்னேற்றம் கண்டுள்ளன.

மேலும் ஏற்கனவே உலகளாவிய பயங்கரவாத குறியீட்டுப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த பாகிஸ்தான், தற்போது சுற்றுச்சூழல் மாசுபாட்டிலும் முதலிடம் பிடித்திருப்பது அந்நாட்டிற்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. 2024-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் பாதுகாப்பான காற்று தரம் கொண்ட நாடுகளின் எண்ணிக்கை 7-லிருந்து 13-ஆக உயர்ந்துள்ளது சற்றே ஆறுதல் அளிக்கும் செய்தியாக உள்ளது.