மும்பையை சேர்ந்த முன்னாள் மாவட்ட அளவிலான கிரிக்கெட் வீரர் சுனித் கோப்ரா, தனது 43வது வயதில் கிரிக்கெட் போட்டி ஒன்றின்போது ACL (முன்புற  தசைநார்) கிழிந்து, மிகக்கடுமையான காயத்திற்கு உள்ளாகினார். கோவிட்-19 காலத்தில் இந்த காயம் அவரை மாதக்கணக்கில் விளையாட்டிலிருந்து  மட்டும் அல்லாமல், பணியிலிருந்தும் ஒதுங்க வைத்தது. அதன் பின்பு தானேயில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்த பின், அவர் பிசியோதெரபி பயிற்சியின் ஒரு பகுதியாக சைக்கிள் சவாரியை தொடங்கினார்.

அதே சைக்கிளிங் பயிற்சி, விரைவில் அவரது நிஜமான ஆர்வமாக மாறியது. ஆரம்பத்தில் 100 கி.மீ., அதன் பிறகு 200, 400, 600, 1,000 என தூரங்களை கடந்து, இறுதியில் 1,200 கிலோமீட்டர் தூரத்தை 83 மணி நேரத்தில் முடித்துவிட்டார். இதன் மூலம், அவர் இந்திய அளவில் “நேஷனல் ப்ரெவே சைக்கிளிஸ்ட்” பட்டத்தை பெற்றுள்ளார். இது அவருடைய வாழ்க்கையில் ஒரு மீள்பிறவி என்றே கூறலாம்.

இதுபற்றி சுனித் கோப்ரா தெரிவித்ததாவது, “காயம் வந்த பிறகு திரும்ப விழுந்த இடத்திலிருந்து எழுவது கடினம் தான். ஆனாலும், பொறுமை, விடாமுயற்சி , மருத்துவ ஆலோசனையை நம்பிக்கைபடித் தொடர்ந்து பின்பற்றுதல், இவை அனைத்தும் இருந்தாலே மீண்டும் உயர முடியுமே என்பதற்கு நானே நம் நாடு முழுக்க ஒரு எடுத்துக்காட்டு!” என்றார். அவரது இந்த சாதனை, இன்று விழுந்து தவிக்கும் பலருக்கும் தன்னம்பிக்கை அளிக்கும் அசராத உத்வேகமாக மாறி வருகிறது.