ஐபிஎல் 2024 டி20 போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா செயல்படுகிறார். மும்பை அணிக்கு பல்வேறு கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மா இந்த சீசனில் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தா ஹர்திக் பாண்டியா தற்போது மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முதல் 3 போட்டிகளில் தோல்வி தழுவிய மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்தடுத்து 2 போட்டிகளில் வெற்றி பெற்று மீண்டும் பாதைக்கு திரும்பியுள்ளது. தொடக்கத்தில் முழுமையாக பந்து வீசிய ஹர்திக் பாண்டியா அடுத்தடுத்து குறைவான ஓவர்கள் மட்டுமே பந்து வீசி வருகிறார்.

இது பற்றி நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சைமன் டவுல் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ஒரு போட்டியில் அதிக ஓவர் வீசி விட்டு அடுத்தடுத்த போட்டிகளில் பந்து வீசவில்லை என்றால் அவர் காயமடைந்துள்ளார் என்று அர்த்தம். அவரிடம் ஏதோ தவறு இருக்கிறது. ஆனால் அதை அவர் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் அவரிடம் தவறு இருப்பது உறுதி என்று என்னுடைய உள்ளுணர்வு சொல்கிறது என்று கூறியுள்ளார். ஏற்கனவே ஹர்திக் பாண்டியாவுக்கு காலில் காயம் ஏற்பட்டதால் தான் உலகக்கோப்பை தொடரில் விளையாடாமல் விலகி இருந்தார். தற்போது அவர் நேரடியாக ஐபிஎல் போட்டியில் கலந்து கொண்டுள்ள  நிலையில் அவருக்கு மீண்டும் காலில் வலி ஏற்பட்டுள்ளதால் தான் அவரால் சரியாக பந்து வீச முடியவில்லை என சர்ச்சைகள் எழுந்துள்ளது.