பிரிமீயர் கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டி ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் ஓமன் நாட்டில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 7-வது லீக் ஆட்டத்தில் கத்தார் மற்றும் நேபாள அணிகள் மோதியது. இந்த போட்டியில் நேபால் அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய நேபாள 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 210 ரன்கள் குவித்தது. இந்த போட்டியில் திபேந்திர சிங் அய்ரீ, கம்ரான் கான் வீசிய கடைசி ஓவரில் 6 சிக்ஸர்களை பறக்க விட்டார்.

இதனால் சர்வதேச டி20 போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசிய 3-வது வீரர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார். இந்த சாதனையை ஏற்கனவே இந்தியாவின் யுவராஜ் சிங் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பெல்லார்டு ஆகியோர் படைத்துள்ளனர். கடந்த வருடம் நடைபெற்ற டி20 போட்டியில் திபேந்திர சிங் 9 பந்தில் அரை சதம் அடித்து சாதனை படைத்திருந்தார். மேலும் திபேந்திர சிங்குக்கு 24 வயது ஆகும் நிலையில் அவர் மொத்தம் 60 டி20 போட்டி, 55 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.