மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை ஆறு பேர் உயிரிழந்துள்ள நிலையில் 12 பேர் காயமடைந்துள்ளனர். தாழ்வான பகுதிகளில் பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பு மண்டலங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் புனே, மும்பை, பால்கார், தானே மற்றும் ராய்காட் ஆகிய நகரங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் கல்வித்துறை விடுமுறை அறிவித்துள்ளது. இன்று காலை 8.30 மணி வரை மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால் 100 மற்றும் 112 ஆகிய நம்பரை அழைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.