ஆந்திர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்காலத்தில் பெரிய அளவிலான மதுபான ஊழல் நடந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர். எனவே இந்த ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன் அடிப்படையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் சிலரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் அதே கட்சியை சேர்ந்த வருண் புருஷோத்தம்மன் என்பவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.‌ விசாரணையில் அவர் மதுபான ஊழலின் மூலம் ரூபாய் 11 கோடி வரை வசூல் செய்ததாக தெரியவந்தது.

அந்த பணத்தினை அவர் தன்னுடைய பண்ணை வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக விசாரணையில் கூறியதைத் தொடர்ந்து புருஷோத்தமனின் பண்ணை வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு சுமார் 12 அட்டைப் பெட்டிகளில் கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

எனவே அவற்றை பறிமுதல் செய்த போலீசார் பணம் எண்ணும் இயந்திரம் மூலம் ரூபாய் நோட்டுகளை எண்ணிப் பார்த்தனர். அதில் மொத்தம் 11 கோடி ரூபாய் ரொக்கப் பணமாக இருந்தது. இதனை தொடர்ந்து அந்த ஊழல் பணத்தினை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் வருண் புருஷோத்தமனை ‌ கைது செய்தனர். இதுகுறித்த விவரங்கள் விரைவில் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.