கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த தொட்டபெட்டரை கிராமத்தில் வயதான தம்பதியினர் வசித்து வந்தனர். கடந்த 14ஆம் தேதி முதியவரும் மூதாட்டியும் வீட்டில் தனியாக இருந்த நேரம் பார்த்து ஏழு பேர் கொண்ட கும்பல் திடிரென முதியவர் வீட்டிற்குள் நுழைந்தனர். பின்பு முதியவரை தாக்கி கீழே தள்ளிவிட்டு மூதாட்டி அணிந்திருந்த நகைகளை மிரட்டி வாங்கிக்கொண்டு அவர்களிடம் இருந்த ரூபாய் 3.20 லட்சம் பணத்தை பறித்து சென்றனர்.

இது தொடர்பாக வயதான தம்பதியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் வழக்கினை விசாரித்த போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளில் சோதனை செய்தபோது அந்த கும்பல் வந்த காரின் எண்ணை வைத்து கொள்ளையர்களை யார் என்பது குறித்து அறிந்தனர்.

அவர்கள் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ராமன்(29), தமிழ்(19), எல்சின் ஜெபராஜ்(25), வெங்கட்ராமன்(37) மற்றும் தமிழ்மணி(31) என்பது தெரியவந்தது. எனவே போலீசார் இவர்கள் ஐந்து பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த பணம் மற்றும் நகைகளை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீசார் அந்த கும்பலிடம் விசாரணை நடத்திய போது வயதான முதியவர் மற்றும் மூதாட்டி வீட்டில் தனியாக வசித்து வந்ததை பல நாள் நோட்டமிட்டு இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து தலைமுறைவாக உள்ள மற்ற இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.