டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி.

2024 ஐபிஎல்லின் 20வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல் அணிகள் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி மும்பை அணியின் துவக்க வீரர்களா களம் இறங்கிய ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் இருவரும் அதிரடி தொடக்கத்தை கொடுத்தனர். இதனால் மும்பை அணி பவர் பிளேவில் 75 ரன்கள் குவித்தது.

இதையடுத்து ரோகித் சர்மா அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்சர் படேலின் 7வது ஓவரின் கடைசி பந்தில் போல்ட் ஆனார். ரோகித் சர்மா 27 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்ஸர் உட்பட 49 ரன்கள் எடுத்தார். இதையடுத்து காயத்தில் இருந்து மீண்டு வந்த சூர்யகுமார் யாவும் நோர்க்கியாவின் ஓவரில் டக் அவுட் ஆனார்.

தொடர்ந்து சிறப்பாக ஆடிய இஷான் கிஷன் 23 பந்துகளில் 42 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். பின் திலகர்மா 6 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து ஹர்திக் பாண்டியா மற்றும் டிம் டேவிட் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினர். தொடர்ந்து நோர்கியா வீசிய 18 ஆவது ஓவரின் கடைசி பந்தில் ஹர்திக் பாண்டியா 33 பந்துகளில் 39 ரன்களில் அவுட் ஆனார்.

இதையடுத்து ரொமாரியோ ஷெப்பர்ட் மற்றும் டிம் டேவிட் கைகோர்த்தனர். இறுதியில் நோர்க்யாவின் கடைசி ஓவரில் ஷெப்பர்ட் சிக்ஸ், பவுண்டரி என அடித்து ரசிகர்களுக்கு விருந்து அளித்தார். அதன்படி அந்த ஓவரில் 4,6,6,6,4,6 என 32 ரன்கள் விளாசினார்.  இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 20  ஓவர் முடிவில் 234 ரன்கள் என்ற இமாலய இலக்கை குவித்தது. டிம் டேவிட் 21 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்ஸர் உட்பட 45 ரன்களுடனும், ஷெப்பர்டு 10 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்ஸர் உட்பட 39 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். டெல்லி அணியில் அதிகபட்சமாக அக்சர் படேல் மற்றும் நோர்க்கியா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து 235 ரன்கள் என்ற இமாலை இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. அந்த அணியில் தொடக்க வீரர்களான களமிறங்கிய டேவிட் வார்னர் 10 ரன்னில் அவுட் ஆனபோதிலும், மற்றொரு துவக்க வீரர் பிருத்வி ஷா 40 பந்துகளில் 8 பவுண்டரி, 3 சிக்ஸர் உட்பட 66 ரன்கள் குவித்து வெளியேறினார்.

இதையடுத்து அபிஷேக் போரல் மற்றும் ஸ்டப்ஸ் இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினர். மறுபுறம் ஸ்டப்ஸ் அதிரடியாக விளையாடினார். பின் போரல் 31 பந்துகளில் 41 ரன்களுக்கு அவுட் ஆனார். தொடர்ந்து ரிஷப் பண்ட் 1, அக்சர் படேல் 8, லலித் யாதவ் 3, குமார் குஷாக்ரா 0, ரிச்சர்ட்சன் 2 ரன்னில் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினார். டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது.

டெல்லி அணியில் ஸ்டப்ஸ் அதிரடியாக கடைசி வரை அவுட் ஆகாமல் 25 பந்துகளில் 3 பவுண்டரி, 7 சிக்ஸர் உடன் 71 ரன்கள் உடன் களத்தில் இருந்தார். இதன் மூலம் டெல்லி கேப்பிடல் அணியை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி. மும்பை அணி 4 போட்டிகளில் விளையாடி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. ஹாட்ரிக் தோல்வியடைந்த நிலையில், 4வது போட்டியில் வென்றுள்ளது. அதோடு வரலாற்றில் 150 வெற்றிகளைப் பதிவு செய்த முதல் டி20 அணியாக மும்பை இந்தியன்ஸ் ஆனது.