சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், இந்தியாவின் முதல் பெண் பார்டெண்டரான கவிதா மேதர் ஒரு குழந்தையை தூக்கியவாறு தீப்பிழம்புகள் கொண்ட பாட்டில்களை வைத்து சாகசம் செய்யும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவை கவிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “நவராத்திரி ஸ்பெஷல்” என்ற தலைப்பில் பகிர்ந்துள்ளார். இதுவரை 2.6 கோடிக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்ட இந்த வீடியோ, நவராத்திரி நிகழ்ச்சியின் போது பதிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. ஆனால், குழந்தையுடன் இப்படி ஆபத்தான சாகசம் செய்தது பலரிடையே விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
பலர் கவிதாவின் திறமையையும் தன்னம்பிக்கையையும் பாராட்டினாலும், குழந்தையை இதில் ஈடுபடுத்தியது ஆபத்தானது என்று விமர்சித்துள்ளனர். ஒரு சமூக ஊடக பயனர், “இப்படி குழந்தைகளை வைத்து வீடியோ எடுக்கக் கூடாது” என்று கூறியுள்ளார். மற்றொருவர், “அவரது திறமை பாராட்டுக்குரியது, ஆனால் குழந்தையின் உயிரை பணயம் வைப்பது மிகவும் தவறு” என்று கருத்து தெரிவித்தார். மற்றொரு பயனர், “திறமைக்கு மரியாதை, ஆனால் குழந்தையை இதில் சேர்க்காமல் இருந்திருக்க வேண்டும். பாதுகாப்பு முதலில் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்” என்று கூறினார்.
கர்நாடகாவைச் சேர்ந்த கவிதா மேதர், ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் பார்டெண்டிங் துறையில் முன்னோடியாக விளங்குகிறார். சிறிய விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர், குடும்ப செலவுகளுக்காக பார்டெண்டிங் செய்யத் தொடங்கினார். பின்னர், பாட்டில்கள் மற்றும் கிளாஸ்களை வைத்து நடனமாடுவது போன்று சாகசம் செய்யும் ஃபிளேர் பார்டெண்டிங்கில் தேர்ச்சி பெற்று, இந்தியாவின் முதல் பெண் ஃபிளேர் பார்டெண்டரானார். 2021ஆம் ஆண்டு வேர்ல்டு புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இவரது திறமை பதிவு செய்யப்பட்டது. 2022இல் இந்தியாஸ் காட் டேலண்ட் நிகழ்ச்சியில் பங்கேற்று, தனது அற்புதமான ஆற்றலால் பாராட்டுகளைப் பெற்றார்.
