புதுச்சேரி முதல்வரான ரங்கசாமி, சேலம் அப்பா பைத்தியம் சாமிகளின் தீவிர பக்தர். கோரிமேட்டில் உள்ள பைத்தியம் சாமிகளுக்காக கோயிலையும் கட்டி, தினமும் பூஜை மற்றும் அன்னதானம் நடத்திவரும் நிலையில், அவரது தொண்டர்கள் “வாழும் சித்தர்” என பேனர்களில் புகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், புதுச்சேரி கலை மற்றும் பண்பாட்டு துறையின் சார்பில் காமராஜர் மணிமண்டபத்தில் நேற்று நடைபெற்ற சித்தர்கள் இலக்கிய மாநாட்டு ஆய்வரங்கத்தில், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் ஜான்குமார், லட்சுமி நாராயணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் ஜான்குமார், “முதல்வர் ரங்கசாமி  வாழும் சித்தர். அவர் எதை சொல்கிறாரோ அது அனைத்தும் நடைபெறுகின்றன. அவரது ஆசீர்வாதம் பெற மக்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் அப்பா பைத்தியம் சாமிகள் கோயிலுக்கு வருகிறார்கள்” என  கூறினார்.

மேலும், “முதல்வர் ரங்கசாமி இறந்த பிறகு ஒருகோடியே அதிகமான மக்கள் அவரை சித்தராகவே வழிபடுவார்கள். அவர் புதுச்சேரியில் இருப்பது மூலமாகவே பல பிரச்னைகள் தீர்வடைந்துள்ளன. சித்தர்கள் வரிசையில் நம் மாநில முதல்வரையும் இணைத்துக் கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இவ்வாறு அமைச்சர் வெளியிட்ட இந்தக் கருத்துகள் சமூக வலைதளங்களில் பரவியுள்ளதுடன், அரசியல் மற்றும் ஆன்மிகத்தை கலக்கும் இந்தக் கூற்று குறித்து பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.