கேரள மாநிலம் மலப்புறத்தை சேர்ந்த அலி (வயது 38) என்பவர், கொல்லம் மாவட்டம் ஆயூரில் துணிக்கடை நடத்தி வந்தார். இந்த கடையில் திவ்யாமோள் (வயது 38) என்ற பெண் மேலாளராக பணியாற்றி வந்தார்.
வழக்கம்போல் கடந்த மாலை கடை பணிகள் முடிந்ததும் மற்ற ஊழியர்கள் வீடுகளுக்குச் சென்று விட்டனர். ஆனால் திவ்யாமோள் மட்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, அவர் அலியுடன் வெளியூர் சென்றிருப்பார் என அவரது குடும்பத்தினர் எண்ணினர். இருவரும் கடந்த காலங்களில் துணி கொள்முதல் செய்ய பெங்களூர், கோயம்புத்தூர் போன்ற இடங்களுக்கு சென்றிருந்தது வழக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்த நாள் காலை கடைக்கு வந்த ஊழியர்கள், கடை உள்புறமாக பூட்டப்பட்டிருந்ததை கவனித்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சடயமங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், கடையின் ஷட்டரை திறந்து உள்ளே சென்று பார்வையிட்ட போது, அலி மற்றும் திவ்யாமோள் இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, இது தற்கொலைவா அல்லது வேறு காரணமா? என்பதற்கான விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இருவரும் திருமணமானவர்கள் என்றும், அலிக்கு ஒரு பெண் குழந்தை மற்றும் திவ்யாமோளுக்கு கணவரும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர் என்றும் தெரியவந்தது. தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியாமல் உள்ளது. இந்த சம்பவம் ஆயூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
