சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் தமிழகத்தில் நடத்துவதற்கான அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் போடும் பட்ஜெட்டுக்கு விளக்கப் பொதுக்கூட்டம் நடத்தியதில்லை. ஆனால் மத்திய அரசின் பட்ஜெட் தொடர்பாக விளக்கப் பொதுக்கூட்டம் நடத்துவார்.
தான் போடும் பட்ஜெட்டை பற்றி பேசாமல் மத்திய அரசு பட்ஜெட்டை பற்றி பேசுவதற்காக ஸ்டாலின் திருவள்ளூர் சென்றாரோ அப்பவே மத்திய அரசின் பட்ஜெட் சிறப்பானது என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. உலக நாடுகள் திரும்பிப் பார்க்கும் ஆட்சி தான் மத்தியில் நடந்து கொண்டிருக்கிறது. அனைத்து இடங்களிலும் மரியாதை கிடைகக கூடிய தலைவர் பிரதமர் மோடி.
ஒரு மனிதனுக்கு எப்போது வாய் கொழுப்பு அதிகரிக்கின்றதோ அழிவு அப்போதே ஆரம்பமாகிவிட்டதாக அர்த்தம். உங்களுடைய கட்சியில் தான் துண்டை போட்டு நீங்க உங்களுக்குப் பிறகு உதயநிதி மற்றும் இன்ப நிதி என்று உங்கள் குடும்பத்தினரே தலைவர் பதவியில் இருக்கப் போறீங்க. பாஜக தலைவராக தொடர முடியாது என்பது எனக்கு நன்றாக தெரியும். எங்கள் கட்சியை பொறுத்த வரையில் ஒருவரே தொடர்ந்து பதவியில் நீடிக்க முடியாது. ஆனால் நான் இங்கிருந்து செல்வதற்கு முன்பு அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒரு செங்கலையும் எடுக்காமல் விடமாட்டேன் என்று அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.
