எதிர்வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணிக் குறித்து தேமுதிக இன்னும் இறுதி முடிவை அறிவிக்காதது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “இந்தத் தேர்தல் தேமுதிகவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக்கூடிய மிக முக்கியமான தேர்தல். அதனால் மிகவும் சிந்தித்து, நிதானமாக ஒரு முடிவை எடுக்க வேண்டிய சூழலில் இருக்கிறோம்; அதனால்தான் இந்தச் சிறு காலதாமதம்” என்று விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், தனது பொறுப்பு குறித்து மிகவும் உருக்கமாகப் பேசிய அவர், “இத்தனை நாட்களாக நான் கட்சியின் அண்ணியாக இருந்து முடிவுகளை எடுத்தேன். ஆனால், கேப்டன் மறைவுக்குப் பிறகு, இப்போது ஒரு தாயாக இருந்து இந்தக் கட்சியையும், லட்சக்கணக்கான தொண்டர்களையும் காப்பாற்ற வேண்டிய கடமை எனக்கு உள்ளது. ஒரு தாய் தனது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக எப்படி யோசித்து முடிவெடுப்பாரோ, அதேபோல் கட்சியின் நலன் கருதி சிறந்த முடிவை எடுப்பேன்” என்று தெரிவித்துள்ளார். அவரின் இந்தப் பேச்சு தேமுதிக தொண்டர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
