பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள மங்கோபிர் தர்கா, அங்கிருக்கும் சுமார் 200 முதலைகளுக்காகச் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சூஃபி துறவி பிர் மங்கோ என்பவரின் நினைவாகக் கட்டப்பட்ட இந்த தர்காவில் உள்ள குளத்தில், முதலைகள் ஒரு குடும்பமாக வாழ்ந்து வருகின்றன. அங்கு வரும் பக்தர்கள் இந்த முதலைகளுக்குத் தங்கள் கைகளாலேயே இறைச்சி, முட்டை மற்றும் இனிப்புகளை ஊட்டி விடுகின்றனர். இந்த முதலைகள் யாரையும் தாக்குவதில்லை என்றும், இவை தர்காவின் பாதுகாவலர்கள் என்றும் அங்குள்ள மக்கள் நம்புகின்றனர்.

​இந்த முதலைகளின் பிறப்பு குறித்து அங்கு நிலவும் நாட்டுப்புறக் கதைதான் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. துறவி பாபா ஃபரித்தின் தலையிலிருந்த பேன்கள் இந்த ஏரியில் விழுந்து முதலையாக மாறியதாகக் கூறப்படுகிறது. அறிவியல் ரீதியாக இவை சதுப்புநில முதலைகள் என்று கூறப்பட்டாலும், பக்தர்கள் இதனை ஒரு அதிசயமாகவே கருதுகின்றனர். இந்த வீடியோவைச் சமூக வலைதளங்களில் பார்த்த பலரும், “பேனில் இருந்து முதலை வந்ததா?” என ஆச்சரியத்துடனும், கிண்டலாகவும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.