சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு காணொளி, பார்ப்பவர்களின் இரத்தத்தை உறைய வைத்துள்ளது. ஒரு பொது விழாவில் பலரும் உணவருந்திக் கொண்டிருக்கும் வேளையில், நபர் ஒருவர் எரியும் எரிவாயு அடுப்பின் மீது (Gas Stove) ஒரு கேஸ் சிலிண்டரை வைத்து, அதன் மீது எவ்வித அச்சமுமின்றி அமர்ந்துள்ளார். அங்கிருந்தவர்களை இன்னும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது என்னவென்றால், அந்த அபாயகரமான நிலையிலும் அவர் ஒரு கையில் சிலிண்டரைப் பிடித்துக்கொண்டு, மற்றொரு கையால் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார்.

​இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அந்த நபரின் பொறுப்பற்றத்தனத்தைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இருப்பினும், சில தொழில்நுட்ப ரீதியான கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன. குளிர்காலத்தில் சிலிண்டரில் உள்ள எரிவாயு உறைந்து விடுவதால், அதைச் சூடுபடுத்த மக்கள் இது போன்ற விபரீத முயற்சிகளை மேற்கொள்வதாக ஒரு பயனர் குறிப்பிட்டுள்ளார். “உயிரை விட கேஸ் தான் முக்கியமா?” என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு சிறிய கசிவு ஏற்பட்டால் கூட அந்த இடமே சுடுகாடாக மாறிவிடும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் அவர் செய்த இந்தச் செயல், இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.