தமிழக அரசியலின் மூத்த தலைவர்களில் ஒருவரான பண்ருட்டி ராமச்சந்திரன், ‘எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்’ என்ற புதிய கட்சியை இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் இயங்கி வந்த ‘அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு’வில் நிலவி வந்த தேக்கநிலை மற்றும் அரசியல் முடிவுகளை எடுப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, அதிருப்தியடைந்த நிர்வாகிகள் பலரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த புதிய கட்சி உதயமானது.

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற இதற்கான ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுகவின் உண்மையான கொள்கைகளையும் எம்ஜிஆரின் லட்சியங்களையும் நிலைநாட்டப்போவதாக அவர் அறிவித்தார். இந்த புதிய கட்சியின் அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில், குறிப்பாக அதிமுக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஓ.பி.எஸ் அணியிலிருந்து விலகிய காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் ஆர்.வி. ரஞ்சித்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பண்ருட்டி ராமச்சந்திரனின் இந்த முடிவை ஆதரித்து அவருடன் இணைந்துள்ளனர். 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு, தங்களின் பலத்தை நிரூபிக்கப்போவதாகவும், தமிழகத்தில் நிலவும் தற்போதைய அரசியல் சூழலில் ஒரு வலுவான கூட்டணியை அமைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.