ஈரான் மற்றும் இஸ்ரேல் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்காவின் பார்வை இப்போது கியூபா பக்கம் திரும்பியுள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்கா தங்கள் நாட்டின் மீது ராணுவத் தாக்குதல் நடத்தவோ அல்லது ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபடவோ எந்தவிதமான நியாயமான காரணமும் இல்லை என்று கியூபா அதிபர் மிகுவெல் டயஸ்-கானெல் மிகக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
“எங்கள் மீது போர் தொடுத்தால் அது அமெரிக்காவுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும்; நாட்டின் பாதுகாப்புக்காக உயிரைக் கொடுக்கவும் நாங்கள் தயார்” என்று உருக்கமாகப் பேசிய அவர், கியூபாவின் தேசிய கீதத்தில் உள்ள ‘நாட்டிற்காக இறப்பது என்பது வாழ்வதற்குச் சமம்’ என்ற வரிகளை நினைவுகூர்ந்து அமெரிக்காவுக்கு நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஏற்கனவே அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் கியூபாவில் 40 சதவீத எரிபொருள் மட்டுமே கையிருப்பில் உள்ள நிலையில், வெனிசுலா மற்றும் ரஷ்யாவிடமிருந்து வரும் உதவிக்காக அந்த நாடு காத்திருக்கிறது.
இந்த இக்கட்டான சூழலிலும், “நாங்கள் யாருடைய நிபந்தனைகளுக்கும் கட்டுப்பட மாட்டோம்” என்று கியூபா பிடிவாதம் காட்டி வரும் நிலையில், கியூபாவின் தலைமை ஊழல் நிறைந்தது என டிரம்ப் விமர்சித்துள்ளது இரு நாடுகளுக்கு இடையே எந்நேரமும் போர் வெடிக்கும் சூழலை உருவாக்கியுள்ளது.
