இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடந்த சமாதானப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து, ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளன.

கடல் வர்த்தகப் பாதையைத் திறப்பது குறித்த ஒருமித்த கருத்து எட்டப்படாததால், ஆத்திரமடைந்த அமெரிக்கா ஹார்முஸ் ஜலசந்தியில் கடும் கடல்வழி முற்றுகையைத் (Blockade) தொடங்கியுள்ளது.

இதற்குப் பதிலடியாக ஈரான் விடுத்துள்ள மிரட்டல் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளையும் நடுக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்கா தனது துறைமுகங்களை முடக்க நினைத்தால், ஓமன் மற்றும் பாரசீக வளைகுடாவில் உள்ள எந்தவொரு நாட்டின் துறைமுகமும் பாதுகாப்பாக இருக்காது என்றும், ஒரு துறைமுகம் கூடச் செயல்படாது என்றும் ஈரான் ராணுவம் நேரடியாகவே எச்சரிக்கை விடுத்துள்ளது.

சர்வதேச கடல் சட்டங்களை அமெரிக்கா மீறுவதாகவும், தங்கள் நாட்டு நலனைப் பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்லத் தயார் என்றும் ஈரான் சீறியுள்ளது.

அதேசமயம், இந்தியக் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்கத் தாங்கள் உதவுவோம் என ஈரான் ஒரு பக்கம் கூறினாலும், அமெரிக்காவின் இந்த முற்றுகை உலகளாவிய எரிபொருள் விலையை விண்ணைத் தொடச் செய்யும் என்பதால் இந்தியா உள்ளிட்ட நாடுகள் பெரும் கவலையில் உள்ளன.