உலகின் மிகப்பெரிய உதடுகளைக் பெறும் நோக்கத்தில் பல்கேரியாவைச் சேர்ந்த 27 வயதான ஆண்ட்ரியா இவனோவா என்ற பெண் கடந்த ஆறு வருடங்களாக பல்வேறு அழகு சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, லிப் ஃபில்லர் சிகிச்சைக்காக மட்டும் ரூ.21 லட்சம் செலவிட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் புகழ் பெற்றுள்ள இவர், தனது முகத்தின் தோற்றத்தை மாற்ற பல்வேறு சிகிச்சைகள் எடுத்துள்ளார். இதில், தாடை வடிவமைப்பு, கன்னம் விரிவாக்கம் மற்றும் முக எலும்பு மேம்பாடு போன்றவை அடங்கும்.

ஆண்ட்ரியாவுக்கு இயற்கையான தோற்றம் பிடிக்கவில்லை என்றும், விசித்திரமான அழகு தான் விருப்பம் என்றும் அவர் கூறியுள்ளார். அதனால் ஒரே நாளில் ஆறு முக சிகிச்சைகளை செய்ய விரும்பினார்.

ஆனால் அவரது வழக்கமான மருத்துவர் இது ஆபத்தானது எனக் கூறி மறுத்ததால், ஜெர்மனியில் உள்ள மற்றொரு நிபுணரிடம் இந்த சிகிச்சைகளை மேற்கொண்டார். இதனால் சிகிச்சைக்கு பிறகு அவரது முகத்தில் வீக்கம், வலி, சிரிப்பதில் சிரமம் உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வுகள் குறித்து கருத்து தெரிவித்த ஜெர்மனிய அழகு மருத்துவ நிபுணர் ஒருவர், “மீண்டும் மீண்டும் அதிக அளவில் ஃபில்லர் போடுவதால், முகத்தில் இரத்த ஓட்டம் தடைபட்டு ‘நெக்ரோசிஸ்’ என்ற நிலை ஏற்படலாம். இது முகத்தின் திசுக்கள் அழுக வழிவகுக்கும்.
சில நேரங்களில் நிரந்தர சிதைவு, குருட்டுத்தன்மை போன்ற ஆபத்துக்களும் ஏற்படலாம்” என எச்சரித்துள்ளார். இது மிகவும் ஆபத்தான நிலையாக மருத்துவ உலகில் கருதப்படுகிறது.
இது தொடர்பாக ஆண்ட்ரியா கூறும்போது, “மக்களை அவர்களது தோற்றத்தின் அடிப்படையில் மதிக்கக்கூடாது. எனக்கு இது மகிழ்ச்சியை தருகிறது. எனவே, எதிர்காலத்திலும் பல சிகிச்சைகளை தொடர விருப்பமுள்ளது” என தெரிவித்தார்.
ஆனால் மருத்துவர்கள், இந்த அளவிலான திருத்தங்கள் உடல்நலத்திற்கு மிகப்பெரும் அபாயம் ஏற்படுத்தும் என்பதால், எல்லைகளை மீறக் கூடாது என சுட்டிக்காட்டி இருக்கின்றனர்.
